சென்னை: கடன் வாங்கித் தருவதாக ரூ. 2 கோடி பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மேலும் ஒரு மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 6வது மோசடி வழக்கு இது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
வடபழனி வெங்கீஸ்வரர் நகரைச் சேர்ந்தவர் ரா.மணியம் (60). இவர் மலேசியாவில் வாகன உதிரி பாகங்கள் தொழில் செய்து வருகிறார். மணியத்துக்கு தொழிலுக்கு ரூ. 100 கோடி பணம் தேவைப்பட்டதாம்.
இதையறிந்த பவர் ஸ்டார் சீனிவாசன், ரூ. 100 கோடி கடன் வாங்கித் தருவதாக தெரிவித்தாராம். ஆனால் அதற்கு தனக்கு கமிஷனாக ரூ.2.50 கோடி தர வேண்டும் என்று சீனிவாசன் தெரிவித்தாராம். அதை நம்பிய மணியம், சீனிவாசனிடம் ரூ.2.50 கோடி கொடுத்ததாகத் தெரிகிறது.
பணத்தை பெற்றுக் கொண்ட சீனிவாசன், அதன் பின்னர் கடன் வாங்கிக் கொடுக்கவில்லையாம். இதனால் மணியம், தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டாராம். ஆனால் சீனிவாசன் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும் அவரை சீனிவாசன் மிரட்டினாராம். இது குறித்து மணியம், சென்னை பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப் பிரிவில் புகார் செய்தார். அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் சீனிவாசன் மீது புதிதாக ஒரு மோசடி வழக்கை வெள்ளிக்கிழமை பதிவு செய்தனர்.
சீனிவாசன் மீது இதுவரை 5 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2 வாரங்களுக்கு முன்பே சீனிவாசன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதும் மோசடி புகார்கள் தினமும் சென்னை காவல்துறைக்கு வந்து கொண்டிருக்கின்றன.
இதனால் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்குரிய நடவடிக்கையில் காவல்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. -இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment