மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் வாசன்:
காமன்வெல்த் மாநாட்டை, இலங்கையில் நடத்துவது தமிழர்களுக்கு ஏற்புடையதல்ல. எனவே, மத்திய அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டவுட் தனபாலு: "காமன்வெல்த் மாநாட்டுக்கு இன்னும் காலம் இருக்கு. தமிழர்களுக்கு செய்வதாக உறுதியளித்ததை, இலங்கை அரசு அதற்குள் செய்யவில்லை என்றால், அதுகுறித்து பேசலாம்'னு சொன்ன நீங்க, இப்பவே ஒரு முடிவுக்கு வந்தது ஏன்... இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா நீக்கப்பட்டதில் இருந்து, ரொம்ப குழப்பத்துல இருக்கீங்க... "கப்பலை' விட்டு இறங்கி, ரிலாக்சா ஒரு, "சைக்கிள்' பயணம் மேற்கொள்ள தயாராகிட்டீங்களோன்னு தான் ஊர் முழுக்க, "டவுட்' வந்திருக்கு...!
அமைச்சர் முனுசாமி: மதுப் பழக்கம், போதைக்கு அடிமை, புகை பிடித்தல் மற்றும் பாலினக் கேடுகள் ஆகியவை குறித்து, 1.50 லட்சம் கிராமப்புற இளைஞர்களுக்கு, 2.25 கோடி ரூபாய் செலவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
டவுட் தனபாலு: வீதிக்கு வீதி டாஸ்மாக் கடையை திறந்துட்டீங்க... கோர்ட் உத்தரவுக்கு பிறகும், நெடுஞ்சாலையோர மதுக்கடையை திறந்து வச்சிருக்கீங்க... மது விற்பனை உயர, தீவிர நடவடிக்கை எடுக்கறீங்க... "டாஸ்மாக் பார்'னு, பெருசா எழுதிய போர்டுல, "மது வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு'ன்னு, ரொம்பச் சின்னதா எழுதி வச்சிருக்கறது மாதிரி, இந்த விழிப்புணர்வு தேவையான்னு தான், என்னோட, "டவுட்!'
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: மாநில அரசின் ஒட்டுமொத்த வருவாயில், 45 சதவீதம் கொங்கு மண்டலம் மூலம் கிடைக்கிறது. ஆனால், கொங்கு மண்டலத்தில் அனைத்து துறைகளும் புறக்கணிக்கப்படுகின்றன. வருவாயில், 10 சதவீத பலன் கூட, கொங்கு மண்டலத்துக்கு கிடைப்பதில்லை.
டவுட் தனபாலு: இதே கேள்வியைக் கேட்டு, கொங்கு மண்டலத்துல முளைச்ச, எத்தனை யோ ஜாதிக் கட்சிகள், பல கோடி ரூபாயை நன்கொடையா வசூல் செஞ்சு, இப்ப, காணாமப் போச்சு... "கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக அறிவிக்கணும்'னு, உசுப்பேத்திய கட்சிகளும், ஒண்ணுமில்லாம போச்சு... அதிக வருவாய் தரக்கூடிய கொங்கு மண்டலத்துக்கு, உண்மையா உழைக்கத்தான் ஆளில்லை... அது சரி, கொங்கு மேல, உங்களுக்கு ஏன் இந்த திடீர் கரிசனம்னு தான், எனக்கு, "டவுட்!'





Post a Comment