திண்டுக்கல்:
திண்டுக்கல், மாசிலாமணிபுரம் அங்கன்வாடி மையம் செயல்பட்ட இடத்தில் அரசின் இலவச மிக்சி, கிரைண்டர்கள் வைத்துள்ளதால், குழந்தைகள் வெயிலால் பாதிக்கப்படுகின்றனர்.
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் ஏப்ரல் கடைசி வாரம் அரசின் இலவச கிரைண்டர், மிக்சி, மின்விசிறி ஆகியவை வழங்கப்பட உள்ளன. இதற்காக வருவாய்த்துறையினர் இலவச பொருட்களை, ஊராட்சியில் சமுதாய கூடங்களில் அடுக்கி வைத்துள்ளனர்.
ஊராட்சிக்குப்பட்ட மாசிலாமணிபுரம், சமுதாயக்கூடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. இங்கு இலவச பொருட்கள் கடந்த ஒரு மாதமாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் குழந்தைகள்,வெளியில் உள்ள திண்ணையில் உட்கார வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு மதிய உணவு சுகாதாரமற்ற முறையில் வெட்ட வெளியில் சமைத்து வழங்கப்படுகிறது.
பாதிப்பு: வெயில் காலம் என்பதால், திண்ணையில் ஒருமாதமாக உட்கார வைக்கப்பட்டுள்ளதால், மையத்தில் படிக்கும் குழந்தைகளில் 7 பேர் சின்னம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சில நாட்களாக மையத்திற்கு வராதது குறித்து ஆசிரியை பாரதி, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தந்துள்ளார்.
திண்டுக்கல் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கொடி கூறுகையில்,""ஊராட்சிக்கு சொந்தமான சமுதாய கூடத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது.
எங்களுக்கு தகவல் தெரிவிக்காமல், இலவச பொருட்களை மையத்தில் அடுக்கி வைத்துள்ளனர். குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருக்க, அருகில் உள்ள மையத்திற்கு மாற்றப்படுவார்கள்,'' என்றார்





Post a Comment