எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்:
கெடுதல் செய்வோருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கேற்ப, சான்றாண்மையோடு முதல்வர் ஜெயலலிதா திகழ்கிறார்.
டவுட் தனபாலு:
இதுவரை கெடுதல் தான் செய்தோம்னு சொல்றதுக்கு அதைவிடப் பெரிய மனசு வேணும்... அது, உங்களுக்கு ரொம்பவே இருக்கு... தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ஆறுக்கு அப்புறம் யாருன்னு ஆளுங்கட்சி எதிர்பார்த்துட்டு இருக்கும் போது, "இதோ நான் இருக்கேன்'ன்னு நீங்களே வலிய வந்து சொல்றீங்களோன்னு, "டவுட்' வருதே...!
அமெரிக்க பேராசிரியர் கவுதத் பகத்:
எந்த நேரத்திலும், இந்தியாவுக்கு, பாகிஸ்தானால் பிரச்னை ஏற்படக் கூடிய அபாயம் உள்ளது. இதனால், ஈரானிலிருந்து, குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தில், பாகிஸ்தானை நம்ப வேண்டாம்.
டவுட் தனபாலு:
சரியாத்தான் சொன்னீங்க... பாகிஸ்தான் அரசை நம்பினாலும், அந்த நாட்டோட உளவு அமைப்பை நம்ப முடியாது... அதை விட, அந்த அமைப்புக்கு ஆதரவா இருக்குற, தீவிரவாத இயக்கங்களை நம்ப முடியாது... இவ்வளவு பிரச்னை இருக்கும் போது, பல சந்தர்ப்பங்கள்ல, நம்பிக்கை துரோகம் செஞ்ச, பாகிஸ்தானை நம்பி, எப்படி இந்த திட்டத்தை வடிவமைச்சாங்கன்னே, "டவுட்'டாத்தான் இருக்குது...!
காங்கிரஸ் தமிழக தலைவர் ஞானதேசிகன்:
காவிரி இறுதி தீர்ப்பை, நிறைவேற்றுவதற்கான, மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ராகுலிடம் கோரிக்கை விடுத்தோம்.
டவுட் தனபாலு:
மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, சுப்ரீம் கோர்ட்டுக்கு போயிருக்குது தமிழக அரசு... நீங்களோ, ராகுல்கிட்ட போயிருக்கீங்க... சுப்ரீம் கோர்ட் உத்தரவை, யாரும் கேட்கறதே இல்லை... ராகுல் மனசு வச்சா, காரியம், "சக்சஸ்'னு, நீங்க நினைக்கறது "கரெக்ட்' தான்... கர்நாடகா தேர்தல் சமயத்துல, அவரு இதை செய்வாராங்கிறது தான், "டவுட்!'
Post a Comment