"தி.மு.க., குடும்ப மோதல் விவகாரத்துல, விழுப்புரம் மாவட்ட செயலர் பதவிக்கு, ஆபத்து ஏற்பட்டிருக்கு வே...'' என, புதுத் தகவலுடன், நாயர் கடைக்கு வந்தார் பெரியசாமி அண்ணாச்சி; அவர் கையில், மூன்று விளக்கெண்ணெய் பாட்டில்கள் இருந்தன.
குப்பண்ணாவிடம், விளக்கெண்ணெயைக் கொடுத்து, ""நைட்டு படுக்கும்போது, உச்சந்தலையிலும், உள்ளங்கால்லயும் கொஞ்சம் தடவிக்கும்... வெக்கை தணிஞ்சுடும்...'' எனக் கூறி, விஷயத்தைத் தொடர்ந்தார்...
""விழுப்புரம் மாவட்டத்துல, கனிமொழி மீட்டிங் ரத்தானதுலேர்ந்து, பிரச்னை துவங்கிச்சு... இப்போ, அண்ணன், தம்பி, தங்கைன்னு, சண்டையில கட்சி சிக்கிட்டிருக்கு... இதுக்கெல்லாம் காரணம், விழுப்புரம் மாவட்ட செயலர் பொன்முடி தான்னு சொல்லுதாவ... அதனால, விழுப்புரம் மாவட்டத்தைப் பிரிச்சு, கள்ளக்குறிச்சியை தெற்கு மாவட்டமாவும், விழுப்புரம் பகுதியை, வடக்கு மாவட்டமாவும் உருவாக்கி, தெற்குக்கு, உதய சூரியனையும், வடக்குக்கு, செஞ்சி ராமச்சந்திரனையோ, ராதாமணியையோ, மாவட்ட செயலரா நியமிக்கப் போறதா தகவல்...''
எனக் கூறி முடித்தார் அண்ணாச்சி.
""பா.ஜ.,வுலயும், கோஷ்டி கானம் தலைதூக்க ஆரம்பிச்சுடுத்து ஓய்...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார் குப்பண்ணா.
""சொல்லுங்க... என்ன பிரச்னை...'' என, ஆர்வமானார் அந்தோணிசாமி.
""காங்கிரசுல மட்டுமே, தலைவர்களுக்கு தனித்தனி ஆதரவாளர்கள் உண்டுன்னு நினைச்சிட்டிருந்தோம்... ஒரு குரூப் கூட்டம் நடத்தினா, இன்னொரு குரூப்புக்கு சொல்றதில்லே... இது ஊரறிந்த விஷயம்...
""இப்ப, பா.ஜ.,விலும், கோஷ்டி கானம் பத்திண்டுடுத்து... காரைக்குடியில, பா.ஜ., சார்புல, கட்சி நிதியளிப்பு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செஞ்சிருந்தா... இதுக்கு, காரைக்குடில இருக்குற, கட்சியோட, மாநில துணைத் தலைவர் எச்.ராஜா கலந்துப்பாருன்னு, தொண்டர்கள்லாம் எதிர்பார்த்துண்டிருந்தா... ஆனா, அவர் வரல்லே...
""கூட்டம் நடத்தறது சம்பந்தமா, அவர்ட்ட கலந்தாலோசிக்காம, பொன்.ராதாகிருஷ்ணனோட ஆதரவாளர்கள் செயல்பட்டுண்டு இருக்கறது தான், இதுக்கு காரணம்... பொன்.ராதாகிருஷ்ணனும், இது சம்பந்தமா ராஜாகிட்டே பேசவே இல்லே... இதனால, "என்னோட பகுதியில வந்து, கூட்டத்தை காமிக்கறேளா... நான், ஒங்களோட ஏரியாக்கு போறேன்'ன்னு சொல்லி, 10ம் தேதி, திருச்செந்தூர்ல, கூட்டம்
போட்டார்... இந்த விவகாரம், இப்போ, புகைய ஆரம்பிச்சுடுத்து...'' எனக் கூறி முடித்தார் குப்பண்ணா.
""முதல்வர் பார்வைல பட்டு, சால்வை போத்தி, விசில் அடிச்சு, கை தட்டி, கூட்டத்தைக் காண்பிக்கணும்ன்னு நினைச்சவரு பொழப்புல, மண் விழிந்திருச்சுங்க...'' என, கடைசி மேட்டருக்கு மாறினார்
அந்தோணிசாமி.
""யாரைச் சொல்றே பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.
""தீரன் சின்னமலை பிறந்த நாள் விழாவைக் கொண்டாட, சென்னை வந்திருந்த, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சின்னு ஒரு அமைப்பை ஏற்படுத்திக்கிட்டு, ஆதரவாளர் இல்லாம திண்டாடிட்டிருக்கற ஈஸ்வரன், தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவிக்க வந்த முதல்வர் கண்ணுல படறாப்ல, நின்னிட்டிருந்தாரு... வரிசையா நின்னிட்டிருந்தவங்கள்ல, முதல்வருக்கு சால்வை அணிவிக்க, கொங்கு இளைஞர் பேரவை பொதுச் செயலர் தனியரசுக்கு மட்டும், போலீஸ்காரங்க அனுமதி குடுத்தாங்க... அவரோட கட்சிக் கொடியை மட்டும், தூக்கிப் பிடிக்கச் சொன்னாங்க... இதனால, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்தவங்களுக்கு, "ஆப்பு' அடிச்சா மாதிரி, ஆயிடிச்சுங்க...'' எனக் கூறி முடித்தார் அந்தோணிசாமி.
அனைவரும் டீ குடித்துக் கிளம்பினர்; பெஞ்ச் அமைதியானது.
Post a Comment