"மத்திய அரசை பார்த்து, அஞ்சி நடுங்கிய காலம் எல்லாம், மலையேறிப் போய் விட்டது. இப்போது, மத்திய அரசு தான், மாநில அரசுகளைப் பார்த்து, பயப்பட வேண்டும்' என, தைரியமாகவே, சவால் விடுகிறார், பஞ்சாப் முதல்வரும், சிரோன்மணி அகாலி தளம் கட்சி தலைவருமான, பிரகாஷ் சிங் பாதல்.
மத்திய அரசின், கிராமப்புற சுகாதார திட்ட நிதியின் கீழ், பொதுமக்களுக்கு, ஆபத்து காலத்தில் உதவுவதற்காக, "108' அவசரகால ஆம்புலன்ஸ்கள் இயங்குகின்றன. இந்த ஆம்புலன்ஸ்களில், முதல்வர், பிரகாஷ் சிங் பாதலின், பெரிய அளவிலான படங்கள், இடம் பெற்றிருந்தன.
கடந்தாண்டு நடந்த, சட்டசபை தேர்தலின் போது, ஆம்புலன்ஸ்களில் இருக்கும், பிரகாஷ் சிங் பாதல் படங்களை அகற்றும்படி, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதால், படங்கள் அகற்றப்பட்டன. ஆனால், தேர்தல் நடந்து முடிந்து, மீண்டும், பிரகாஷ் சிங் பாதலே, முதல்வர் பதவியில் அமர்ந்து விட்டார்.
இதையடுத்து, ஆம்புலன்ஸ்களில் மீண்டும், அவரின் படங்கள் இடம் பிடித்து விட்டன.இதைப் பார்த்து, உள்ளூர் காங்., பிரமுகர்களின் காதுகளில், புகை வரத் துவங்கியுள்ளது. "மத்திய அரசு நிதி உதவியின் கீழ் செயல்படும் திட்டத்தில், மாநில முதல்வரின் படம், எப்படி இடம் பெறலாம்; உடனடியாக, அவற்றை அகற்ற வேண்டும்' என, காங்., கட்சியினர், கதறத் துவங்கியுள்ளனர்.
ஆனால், பிரகாஷ் சிங் பாதலோ, "அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா... இப்படித் தான் செய்வோம். வேண்டுமானால், ஆட்சியை, "டிஸ்மிஸ்' செய்யுங்கள் பார்க்கலாம்' என, முஷ்டியை மடக்கி காட்ட, உள்ளூர் காங்., பிரமுகர்கள் அடங்கி விட்டனர்.
"மத்திய அரசுக்கு, ஒரு மரியாதையே இல்லாமல் போச்சே. மத்தியில் கூட்டணி ஆட்சி வந்ததிலிருந்து, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு மீது, பயமில்லாமல் போய் விட்டது' என, முனங்குகின்றனர்.
Post a Comment