திண்டுக்கல்:
திருப்பூர் ஈமு கோழி பண்ணையில் பணம் முதலீடு செய்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 60 பேர் ரூபாய் 90 லட்சத்தை இழந்துள்ளனர். திண்டுக்கல் ஸ்ரீராமபுரத்தில் வசிப்பவர் மணிராஜ்.
திருப்பூர் மாவட்டம் பங்கம்பாளையத்தில் வெல்டெக்ஸ் ஈமு பார்ம் என்ற பெயரில் நிறுவனத்தை துவக்கியிருந்தார். ஒவ்வொரு யூனிட்டின் மதிப்பு ஒன்றரை லட்சம் ரூபாய் என்றும் ஒரு யூனிட்டில் முதலீடு செய்பவர்களுக்கு மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாயும், தீபாவளி போனசாக 20 ஆயிரம் ரூபாயும் தரப்படும் என்று தெரிவித்திருந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி, புதுப்பட்டி பகுதிகளை சேர்ந்த 60 க்கும் மேற்பட்டவர்கள் 90 லட்சம் ரூபாய் வரை இந்நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தனர். ஆரம்பத்தில் சில மாதங்கள் வரை 6 ஆயிரம் ரூபாயை வழங்கிய மணிராஜ் அதன் பின் நிறுத்தி விட்டார்.
தீபாவளியன்று தருவதாக கூறியிருந்த போனசையும் கடந்த ஆண்டு கொடுக்கவில்லை. முதலீட்டாளர்கள் கேள்வி எழுப்பியபோது விரைவில் நிலுவை தொகையை மொத்தமாக கொடுத்து விடுவதாக கூறி வந்தார். அதன் பின் தலைமறைவாகியுள்ளார்.
புகார்:
இவரிடமிருந்து தங்கள் முதலீட்டு பணத்தை மீட்டு தருமாறு பலர் திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் நேற்று புகார் தர வந்தனர். அங்கிருந்த போலீசார், சம்பந்தப்பட்ட ஈமு நிறுவனம் திருப்பூரில் செயல்பட்டு வந்ததால், அம்மாவட்டபொருளாதார குற்றப்பிரிவில் புகார் தருமாறு கூறி திருப்பி அனுப்பினர்.





Post a Comment