சென்னை:
தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல வேகப் பந்து வீச்சாளர் லட்சுமிபதி பாலாஜிக்கும் சென்னையைச் சேர்ந்த மாடல் அழகி பிரியா தலூருக்கும் இடையே நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
இருவருக்கும் செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. சமீபத்தில்தான் சட்டேஸ்வர் புஜாரா, யூசுப் பதான் ஆகியோருக்குத் திருமணம் நடந்தது. இருவரும் காதலித்து மணம் புரிந்தனர்.
இந்த வரிசையில் அடுத்து பாலாஜி சேருகிறார். பாகிஸ்தான் முன்னாள் சர்வாதிகாரி முஷாரப்பால் பாராட்டு பெற்றவர் பாலாஜி. பாகிஸ்தானில் இவர் பந்து வீசிய விதத்தையும், அவரது ஹேர்ஸ்டைலையும்
பாராட்டினார் முஷாரப். அந்த பாலாஜிக்கு இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் போனது யார் குற்றம் என்பது கேள்விக்குரியதாகவே இருக்கிறது.
திறமையான பந்து வீச்சாளராக அறியப்பட்ட பாலாஜி தமிழக அணிக்காக ரஞ்சிப் போட்டிகளில் ஆடுகிறார். மேலும் ஐபிஎல்லில் அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்காக ஆடி வருகிறார்.
31 வயதான பாலாஜியும், பிரியா தலூரும் காதலித்து வந்தனர். இது தற்போது திருமணத்தில் முடிகிறது. இரு வீட்டாரும் இணைந்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஐபிஎல் போட்டிகளைக் காண வந்த இடத்தில்தான் பாலாஜி மீது காதலில் விழுந்தாராம் பிரியா. ஆரம்பத்தில் நண்பர்கள் என்று கூறிக் கொண்டனர். இப்போது திருமணத்தில் இணையவுள்ளனர்.





Post a Comment