அகமதாபாத்:
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைச் சந்தித்த அமெரிக்கக் குழுவுக்குப் பணம் தரப்பட்டதாகவும், பணம் கொடுத்து மோடியை அந்தக் குழு பாராட்டி பேச வைக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
பிஆர்ஓ நிறுவனங்கள் மூலம் செட்டப் செய்து இந்த சந்திப்பை நடத்தியுள்ளது பாஜக என்றும் காங்கிரஸ் வர்ணித்துள்ளது. இதுகுறித்து குஜராத் காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் மோத்வாலா கூறுகையில், இது குஜராத்துக்குப் பெரும் அவமானமாகும்.
16,000 அமெரிக்க டாலர்கள் அதாவது ரூ. 8,68,480 பணத்தைப் பெற்றுக் கொண்டு அமெரிக்கக் குழுவினர் குஜராத் வந்துள்ளனர். அதன் பிறகு இதை அதிகாரப்பூர்வ பயணம் போல சித்தரித்துள்ளனர்.
இது மோசடியாகும். இதற்காக குஜராத் மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார் அவர். ஹை இந்தியா என்ற இணையதளத்தில் இதுதொடர்பாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
அதில் பணம் கைமாறியதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அமெரிக்க குழுவில் இடம் பெற்றிருந்த எம்.பிக்கள் பணத்தைப் பெற்றனரா என்பது குறித்துத் தெரியவில்லை எனஇது தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஓவர்சீஸ் பிரண்ட்ஸ் ஆப் பாஜக என்ற தனியார் அமைப்பின் சார்பில்தான் இந்த அமெரிக்கக் குழுவின் குஜராத் பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
18 பேர்கொண்டஇந்த அமெரிக்கக் குழுவுக்கு இல்லினாய்ஸ் குடியரசுக் கட்சி எம்.பி. ஆரோன் ஷாக் தலைமை தாங்கியிருந்தார்.





Post a Comment