விருதை எதிர்பார்த்து நடிக்கவில்லை: நடிகர் கார்த்தி பேட்டி



கார்த்தி நடிக்கும் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்ள வந்த நடிகர் கார்த்தி கிணத்துக்கடவு அருகே சிங்கராம்பாளையத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் சரணாலயத்துக்கு சென்றார்.

அவரை சரணாலய செயலாளர் சந்திரன் வரவேற்றார்.

அதன் பின்னர் நடிகர் கார்த்தி அங்குள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் மனம்விட்டு பேசினார். நடிகர் கார்த்தியை பார்த்த உற்சாகத்தில் அந்த குழந்தைகள் நீங்கள் நடித்த ‘சிறுத்தை’ படம் பார்த்திருக்கிறோம். அதில் வரும் ஒரு பாடலை பாடுங்கள் என்று அன்பாக வேண்டுகோள் விடுத்தனர்.

மறு நிமிடமே நடிகர் கார்த்தி நான் ரொம்ப ரொம்ப நல்ல பிள்ளை என்ற பாடலை பாடினார். அவர் பாடி முடித்ததும் அந்த மழலைகள் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். மனவளர்ச்சி குன்றிய மழலைகளின் கரவொலியை கேட்ட கார்த்தி அப்படியே மனமுருகி நின்றார்.

பின்னர் சரணாலயத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இனிப்பு வழங்கினார். அப்போது அவர் பேசும் போது, மனவளர்ச்சி குன்றி பிறந்து விட்டோமே என்று நீங்கள் மனம் சோர்ந்து போகக்கூடாது. மனவலுவுடன் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார்.

இல்லத்தில் அனாதையாக விடப்பட்ட பச்சிளங்குழந்தைகளும் பராமரிக்கப்படுகின்றன. அந்த குழந்தைகளையும் நடிகர் கார்த்தி கையில் தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார். பின்னர் படப்பிடிப்புக்கு கிளம்ப தயாரானார். அப்போது அவர் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’, ‘பிரியாணி’ படங்களில் தற்போது நடித்து வருகிறேன். ‘ஆல் இன் அழகு ராஜா’ படத்தின் சூட்டிங் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

அதேபோல் ‘பிரியாணி’ படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடந்து வருகிறது. எந்த கேரக்டரிலும் நடிக்க தயாராக இருக்கிறேன். தேசிய அளவில் விருது பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நடிப்பதில்லை.

நான் நடித்து வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் அமோக ஆதரவு தந்தாலேபோதும். அதுவே விருது கிடைத்த பெருமைக்கு சமமாகி விடும். பாடல்கள் இல்லாத படங்களில் ரசனை இருக்காது. சிறுத்தை 2-ம் பாகம் எடுப்பது குறித்து டைரக்டரிடம் பேசி வருகிறேன்.

தற்போது 5-வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி வருகிறார்கள். இது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. இந்த கொடுமைகள் நடைபெறாமல் தடுக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும். பொதுமக்களும், ஊடகங்களும் இதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.

மனவளர்ச்சி குன்றிய இல்லத்தில் உள்ள குழந்தைகளை பார்க்கும் போது மனதுக்கு சற்று வேதனையாகத்தான் இருந்தது. அந்த குழந்தைகளுடன் சந்தித்த இந்த நாளை என்னால் மறக்க முடியாது.

மேற்கண்டவாறு நடிகர் கார்த்தி கூறினார்.

1 மணி நேரம் சரணாலயத்தில் இருந்த நடிகர் கார்த்தி அங்கிருந்து கிளம்பும்போது சில குழந்தைகள் ஆட்டோகிராப் கேட்டனர். மிகவும் மன மகிழ்ச்சியுடன் கார்த்தி கையெழுத்து போட்டு கொடுத்தார்.

பின்னர் சரணாலயத்தில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் மதிய உணவு வழங்குவதற்கான தொகையை வழங்கி விட்டு அங்கிருந்து படப்பிடிப்புக்கு கிளம்பிச் சென்றார்.
Share This Video :

Post a Comment

 
Copyright © 2013. FullTamilVideos - All Rights Reserved
Designed by FullTamilVideos