நான் பழைய ஆளு இல்ல. முப்பத்தி ஒன்பது வயசாச்சு. என்னை ரொம்ப ஆட விட்றாதீங்க... இப்படி சொன்னவர் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சனான பிரபுதேவா. 'ஆடலாம் பாய்ஸ். சின்னதாய் டான்ஸ்!' இப்படி ஒரு படம் வரப்போகிறது.
இந்தியில் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் பிரபுதேவாதான் ஹீரோ. நாடறிந்த நல்லவராச்சே மாஸ்டர்? அதனால் இந்தி மட்டுமல்ல, இந்தியாவின் முக்கிய மொழிகளிலும் கூட படத்தை ரிலீஸ் பண்ணலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது இப்படத்தை உருவாக்கிய யூடிவி. தமிழ், தெலுங்கு, முதலில்!
இப்படி ஒரு கதையுடன் பிரபுதேவாவை சந்தித்த ரெமோ டிசோசாவிடம் பிரபுதேவா சொன்ன வேண்டுகோள்தான் நீங்கள் மேலே படித்தது. 'இருபது வருஷத்துக்கு முன்னாடி உள்ள பிரபுதேவா மாதிரி நினைச்சு என்னை ஆட வைக்காதீங்க. முப்பத்தி ஒன்பது வயசாயிருச்சு இப்போ. அதுக்கேற்ற மாதிரி ஸ்டெப்ஸ் கொடுங்க' என்றாராம் மாஸ்டர். இதை தன் வாயாலேயே இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் சொல்ல, ரசிகர்களுக்கு ஒரே ஆச்சர்யம். ஒரு ரப்பர் மனுஷன் இப்படியெல்லாமா அஞ்சுவது? ஆனால் திரையிடப்பட்ட ஒரு பாடலில் ரப்பரின் ஆட்டம், இவருக்கு முப்பத்தி ஒன்பது வயசா என்று ஆச்சர்யப்படவும் வைத்தது.
'இந்தியாவிலேயே முதல் ஐந்து முக்கிய டைரக்டர்களில் ஒருவராக இருக்கிறார் பிரபுதேவா. நாங்களே ஒரு படத்தை டைரக்ட் பண்றதுக்காக அவரை அப்ரோச் பண்ணினோம். ஆனால் 2017 வரைக்கும் கால்ஷீட் இல்லைன்னுட்டார். ஆனால் அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதே பெரிய சந்தோஷம்' என்றார் யுடிவி தனஞ்செயன்.
பிரபுதேவா வீற்றிருந்த அந்த மேடையில் ஒரு பெண் கூட இல்லை என்பதுதான் வியத்தகு விந்தை! யுடிவியின் எவர்கிரீன் தொகுப்பாளினி ரம்யா கூடவா ஊர்ல ஃபிரியா இல்ல?





Post a Comment