புவனேஸ்வர்:
"சட்டம் தன் கடமையை செய்யும்,'' என, ஒடிசா மாநில, முன்னாள் சட்ட அமைச்சர், மொகந்தி கைது செய்யப்பட்ட விவகாரத்தில், அம்மாநில முதல்வர், நவீன் பட்நாயக் தெரிவித்தார்.
ஒடிசாவில், பிஜு ஜனதா தளம் கட்சியை சேர்ந்த, நவீன் பட்நாயக், முதல்வராக உள்ளார். அவரது அமைச்சரவையில், சட்ட அமைச்சராக, அதே கட்சியின், ரகுநாத் மொகந்தி இருந்தார்.
அவரது மருமகள், பர்ஷா ஸ்வோகி சவுத்திரி, சில நாட்களுக்கு முன், போலீசில் அளித்த புகாரில், "என் மாமனார் அமைச்சர் ரகுநாத் மொகந்தி, மாமியார் பிரீதிலதா, கணவர் ராஜஸ்ரீ, கணவரின் சகோதரி ரூபஸ்ரீ, அவரது கணவர் சுபந்து மாதுவல் ஆகியோர், வரதட்சணை கேட்டு தினமும் துன்புறுத்துகின்றனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்' என, கோரியிருந்தார்.
இதை அடுத்து, அமைச்சர் பதவியில் இருந்து ரகுநாத் மொகந்தி பதவி விலகி, மனைவியுடன் தலைமறைவாகி விட்டார். அவரது கணவர் ராஜஸ்ரீ, சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னாள் அமைச்சரும், அவர் மனைவியும், கோல்கட்டாவில் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், ஐந்து நாட்களாக, டில்லியில் முகாமிட்டிருந்த, ஒடிசா முதல்வர், நவீன் பட்நாயக் நேற்று, மாநில தலைநகர் புவனேஸ்வர் திரும்பினார்.
அவரிடம், அமைச்சர் மொகந்தி விவகாரம் குறித்து கேட்கப்பட்டதற்கு, ""சட்டம் அதன் கடமையை செய்யும். இந்த விஷயம் குறித்து, நிச்சயமாக கவனத்தில் கொள்ளப்படும்,'' என்றார்.
Post a Comment