ஐ.பி.எல். முதல் லீக் ஆட்டம்: 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி




கொல்கத்தா, ஏப். 5-

உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 6-வது சீசன் இன்று கொல்கத்தாவில் தொடங்கியது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கிய முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை, டெல்லி டேர்டெவில்ஸ் அணி எதிர்கொண்டது.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய டெல்லி அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ. அவரது இலக்கிற்கு விக்கெட்டை இழந்தவர் உன்முக்த் சந்த். இந்த தொடரின் முதல் விக்கெட்டை முதல் பந்திலேயே பெற்ற உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார் பிரெட் லீ.

அதன்பின்னர் வார்னருடன், கேப்டன் ஜெயவர்தனே இணைந்து பந்துகளை பவுண்டரிகளாக பறக்கவிட்டனர். 19 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் விளாசிய வார்னர், 6-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜுனேஜா 8 ரன்களிலும், ஓஜா 9 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். இதேபோல் போத்தா (7 ரன்), பதான் (4 ரன்), ரஸல் (4 ரன்) ஆகியோரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். இதனால் அணியின் ரன்ரேட் வெகுவாகக் குறைந்தது.

இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் போராடி அரை சதம் அடித்த ஜெயவர்தனே 66 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 125. கடைசி இரண்டு பந்துகளில் ஆஷிஷ் நெஹ்ரா (ரன் இல்லை), நதீம் (4 ரன்) ஆகியோர் ஆட்டமிழக்க, டெல்லி அணி 128 ரன்களில் சுருண்டது.

கொல்கத்தா தரப்பில் சுனில் நரைன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பிரெட் லீ, பாட்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், பாலாஜி ஒரு விக்கெட்டுகளும் எடுத்தனர்.

129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணி தொடக்க ஆட்டகாரர் பிஸ்லா 4 ரன்னில் நெஹ்ரா பந்தில் அவுட் ஆனார். காம்பீருடன் ஜோடி சேர்ந்த கல்லீஸ் அதிரடியாக விளையாடினார்கள். காம்பீர் 29 பந்தில் 42 ரன் எடுத்த நிலையில் போதா பந்தில் அவுட் ஆனார். கல்லீஸ் 23 ரன்னிலும் திவாரி 23 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் நதீம் வீழ்த்தினார். இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை கொல்கத்தா வீழ்த்தியது.

கொல்கத்தாவில் பதான் 18 ரன்னிலும், மோர்கன் 14 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். டெல்லி அணியில் நதீம் 2 விக்கெட்டுகளையும், நெஹ்ரா மற்றும் போதா தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர்.

ஆட்ட நாயகன் விருது நரைனுக்கு வழங்கப்பட்டது.
Share This Video :

Post a Comment

 
Copyright © 2013. FullTamilVideos - All Rights Reserved
Designed by FullTamilVideos