தன் நடவடிக்கைகளுக்கு உடன்பட மறுத்து, மாநிலங்களில், தனி செல்வாக்குடன், ராஜாங்கம் நடத்தும், காங்., தலைவர்களை, "வீடு கட்டி' அடிப்பது, காங்., துணைத் தலைவர் ராகுலுக்கு, கை வந்த கலையாகி விட்டது.
"லேட்டஸ்ட்'டாக ராகுலின் கிடுக்கி பிடியில் சிக்கியிருப்பது, மகாராஷ்டிரா மாநில முதல்வர், பிரித்வி ராஜ் சவான். இவர், மகாராஷ்டிர மாநில காங்கிரசை, தன் பிடியில் வைத்திருக்க வேண்டும் என, நினைக்கிறார்.
இதற்கு, ஒத்துழைக்க மறுத்து, போர்க்கொடி தூக்கும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை, வித்தியாசமான முறையில், பழிவாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அவர்கள் தொகுதிகளில், ஏதாவது திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என, கோரிக்கை வைத்தால், அந்த மனுவை, குப்பை தொட்டியில் போட்டு விடுவார்.இதனால், ஆத்திரமடைந்த, 10 எம்.எல்.ஏ.,க்கள், ரயிலில், டில்லிக்கு பறந்தனர்.
காங்., துணைத் தலைவர் ராகுலை சந்தித்து, "பிரித்வி ராஜ் சவான், தொல்லை தாங்க முடியவில்லை; நீங்க தான், ஏதாவது கொசு மருந்து அடித்து, அவரிடம் இருந்து, எங்களை காப்பாற்ற வேண்டும்' என, கண்களை கசக்கினர்.
உடனடியாக அவர்களிடம், ஆளுக்கொரு பேப்பரை கொடுத்து, "பிரித்விராஜ் சவான், எந்த வகையில், உங்களுக்கு தொந்தரவு தருகிறார் என்பதை, இதில் விளக்கமாக எழுதுங்கள்...' என்றார், ராகுல்.
எம்.எல்.ஏ.,க்களோ, "புகார் கொடுக்க வந்தால், பரீட்சை எழுதச் சொல்கிறாரே...' என, முணு முணுத்தபடியே, பரீட்சை எழுதி, ஊர் கிளம்பினர்.
மும்பையில் கால் வைத்த, அடுத்த நொடியே, "பிரித்வியை பற்றி, ராகுலிடம் போட்டு கொடுத்து விட்டோம்; விரைவில், பிரித்விக்கு, ராகுல், "ஆப்பு' வைத்து விடுவார்' என, பெருமையுடன் கூறி வருகின்றனர்.இதனால், கலங்கிப் போயிருக்கிறார், பிரித்வி ராஜ் சவான்.
"சாமி வரம் கொடுத்தாலும்...!'
பா.ஜ.,வில் உள்ள மூத்த தலைவர்களில், ராஜ்நாத் சிங், மிகவும் அதிர்ஷ்டசாலி. ஏற்கனவே ஒருமுறை, கட்சியின் தேசிய தலைவராக பதவி வகித்து விட்டதால், இனிமேல், அவருக்கு, கட்சியில் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள் என்று தான், அனைவரும், நினைத்தனர்.
ஏன், ராஜ்நாத் சிங்கே, அப்படித் தான், நினைத்தார். ஆனால், பங்குனி வெயிலில், பொடி நடையாக நடந்து போனவனுக்கு, "ரோல்ஸ் ராய்ஸ்' காரில், "லிப்ட்' கிடைத்த கதையாக, நிதின் கட்காரியின் புண்ணியத்தால், பா.ஜ.,வின் தேசிய தலைவர் பதவி, மீண்டும் ராஜ்நாத் சிங்கிற்கு தேடி வந்துள்ளது.
இதற்கு பின், ராஜ்நாத் சிங்கின் நடவடிக்கைகளே மாறி விட்டன. மீண்டும், பழைய மிடுக்குடன், வலம் வருகிறார். கட்சியின் தேசிய தலைவராக, ஒருவர் புதிதாக பதவியேற்றால், கட்சியின் மற்ற நிர்வாகிகள் மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.
ஆனால், ராஜ்நாத் சிங் பதவியேற்று, மாதங்கள் பல, கடந்தும், நிர்வாகிகள் மாற்றம் செய்யப்படவில்லை. "இதற்கு என்ன காரணம்' என, விசாரித்த போது, சுவாரஸ்யமான தகவல் ஒன்று கிடைத்தது. கட்சியின் நிர்வாகிகளை மாற்றுவதற்கு, ராஜ்நாத் சிங்கின் ஆஸ்தான ஜோதிடர், இன்னும் வரம் கொடுக்கவில்லையாம்."இப்போது உங்களுக்கு நேரம் சரியில்லை. இன்னும் சில நாட்கள் கழித்து, கட்சி நிர்வாகிகளை மாற்றினால் தான், "ஒர்க் அவுட்' ஆகும்' என, அவர் கூறியதால், நிர்வாகிகளை மாற்றம் செய்யாமல், தாமதித்து வருகிறார், ராஜ்நாத் சிங்.இதனால், பதவியை எதிர்பார்த்து காத்திருக்கும், பா.ஜ., தலைவர்கள், "சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் கொடுக்க மறுக்கிறாரே...' என, ராஜ்நாத்தின் ஜோதிடரை, கழுவி கழுவி ஊற்றுகின்றனர்.





Post a Comment