பாலா இயக்கத்தில் அனைவரின் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் படம் ‘பரதேசி’. இப்படம் வருகிற 15-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படம் குறித்து சுவையான தகவல்கள் உங்கள் பார்வைக்கு இதோ:-
‘பரதேசி படத்துக்கு பாலா முதலில் வைத்த தலைப்பு 'சனிபகவான்'. இரண்டாவதாக 'கல்லறைத்தோட்டம்' என வைத்தார்கள். இறுதியாகத்தான் ‘பரதேசி’ தலைப்பு உறுதியானது.
பாலா தன்னுடைய படங்களில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிக நுணுக்கமாக சித்தரிப்பது வழக்கம். படத்தில் கதாபாத்திரத்தின் பிரதிபலிப்பு நன்றாக இருக்கவேண்டும் என்பதில் முனைப்பாக இருப்பார். இதற்காக ரொம்பவும் மெனக்கெடுவார்.
ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தவில்லையென்றால் நடிகர்களிடம் லேசாக கடிந்து கொள்வார் பாலா. ஆனால், இந்தப் படத்தில் அதர்வாவை ஒரு வார்த்தைகூட திட்டவில்லையாம். பலமுறை ரீடேக் வாங்கியபோதும் அமைதியோடு அதர்வாவுக்கு சொல்லிக் கொடுத்தாராம் பாலா.
படம் முழுக்க கோணியையே உடையாக அணிந்து வாழ்ந்திருக்கும் அதர்வா, பாலாவின் நினைவாக அந்த உடையை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாராம்.
இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் உடன் முதன்முதலாக இணைந்திருக்கும் பாலா, படத்தின் இறுதி வடிவத்தை இளையராஜாவின் ஆசிக்குப் பிறகே பிறரிடம் காட்டும் முடிவில் இருக்கிறாராம்.
இந்த படத்தில் பாடல்களை எழுதிய வைரமுத்து பாலாவிடம் ‘அடுத்த படத்திலும் எனக்கு வாய்ப்பு வழங்குங்கள். வெட்கத்தை விட்டு கேட்கிறேன்’ என்று கேட்டிருக்கிறார். ஆகவே, அடுத்த படத்திலும் வைரமுத்துக்கே வாய்ப்பு வழங்க உள்ளாராம் பாலா.
இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்துக்கு டப்பிங் பேச இயக்குனர் சீமானை அழைக்க முடிவு செய்தார் பாலா. ஆனால், என்ன காரணமா தெரியவில்லை. கடைசி நேரத்தில் அந்த எண்ணத்தை கைவிட்டு விட்டார்.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை படமெடுத்தபோது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதுவிட்டாராம் பாலா. படப்பிடிப்பு நடந்த சோத்துப்பாறை ஏரியாவில் உள்ள சுடுகாட்டில் தன்னையும் மறந்து இரண்டு நாட்கள் படுத்து உறங்கி இருக்கிறார்.
இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், பாலா படங்களிலேயே மிகக்குறுகிய காலத்தில் எடுத்த ஒரே படம் பரதேசிதான். எனவே, தன்னுடைய அடுத்தடுத்த படங்களை இதே வேகத்தில் செய்ய முடிவெடுத்திருக்கிறார் பாலா!
பாலா-வின் படம் என்றாலே, பெரும்பாலும் நகைச்சுவை கலந்த காட்சிகளுடன் விறுவிறுப்பாக செல்லும். இறுதியில் வலிமையான கருத்து இருக்கும். அந்த வரிசையில் ‘பரதேசி’-யும் இடம்பெறும் என்பதை 100 சதவீதம் நம்பலாம்.





Post a Comment