கமலின் விஸ்வரூபம் பட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தீர்ப்பை நாளைக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, “கமல்ஹாசன் தமிழக அரசு அதிகாரிகளுடன் கலந்து பேசி சுமூக முடிவுக்கு வரவேண்டும்” என அறிவுரை கூறியிருந்தார். அதையடுத்து கமல் தமிழக அரசு தலைமை செயலகத்திற்கு வருவார் என்று காத்திருந்தார்கள் நிருபர்கள். ஆனால் அவர் வரவில்லை.
மற்றொருவர் வந்தார்.
வசீகரன் என்ற பெயருடைய அவர், நேரே போய் தலைமை செயலாளரை சந்தித்து தனது லெட்டர் பேடில் ஒரு புகார் எழுதி கொடுத்திருக்கிறார். அப்படியே ஒரு பிரதியை பிரஸ் ரூமில் கொடுத்தவர், “மறக்காம நாளைக்கு தலைப்பு செய்தியாக்கிடுங்க” என்று கூறிவிட்டு நடையைக் கட்டிவிட்டார்.
இந்த வசீகரன், அகில இந்திய கிறிஸ்துவ கழகம் என்ற அமைப்பின் தலைவர்.
அவர் பிரஸ் ரூமில் கொடுத்துவிட்டு சென்ற மனு பிரதியில், “நடிகர் கமல்ஹாசன் இனிமேல் உலக நாயகன் என்ற பட்டப்பெயரை பயன்படுத்த கூடாது. ஏனென்றால் ‘உலக நாயகன்’ என்றழைக்கப்படுபவர் ஏசு பிரான்தான். கமலின் இந்த செயல் ஏசுநாதரை இழிவு படுத்துவது போல இருக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.
தலைமைச் செயலாளர் இந்த புகாரை என்ன செய்தார் என்று தெரியவில்லை.
இப்படியே போனால், நாளைக்கே மற்றொருவர், “பாலாவின் ‘பரதேசி’ என்ற டைட்டில் என் மனைவியின் அப்பாவை கிண்டலடிப்பது போல உள்ளது. அதையும் மாற்றவும்” என்று புகாருடன் வந்து நிற்பார்!
Post a Comment