திரைப்பட இயக்குனர் களஞ்சியத்தின், நற்பெயருக்கு, களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேட்டியளித்ததாக, நடிகை அஞ்சலி மீது, சேலம் நீதிமன்றத்தில், அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
கற்றது தமிழ், அங்காடித்தெரு உள்ளிட்ட, பல்வேறு படங்களில் நடித்த அஞ்சலி, தன் சித்தி மற்றும் டைரக்டர் களஞ்சியம் ஆகியோரால், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, கடந்த மாதம், வீட்டை விட்டு வெளியேறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
"அஞ்சலி கூறுவது பச்சை பொய் எனக் கூறிய, இயக்குனர் களஞ்சியம், தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தி, நல்ல ஆலோசகராக விளங்கிய, தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேட்டியளித்த, அஞ்சலி மீது, தன்னுடைய, "தமிழர் நலம் இயக்கம் சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கப்படும், என அறிவித்தார்.
அதன்படி, தமிழர் நலம் இயக்க நிர்வாகிகள் சார்பில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஓமலூர் ஆணைக்கவுண்டம்பட்டியை சேர்ந்த முருகன், நேற்று சேலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், சென்னை வளசரவாக்கம், பாத்திமா நகர், அருணாசலம் பார்க் அபார்ட்மென்ட்டில் வசிக்கும் சூரியபாபு என்பவரது மகள் அஞ்சலி, 25. திரைப்பட நடிகையான இவர், கடந்த, மார்ச் 8 ம் தேதி, இயக்கத் தலைவர் களஞ்சியத்தின், நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், அவரால் தன் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, பொய் தகவல்களை கூறி, பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துள்ளார்.
இதனால், இயக்கத்தின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அதன் வளர்ச்சிக்கும் கலங்கம் ஏற்படுத்தி விட்டார். மேலும், எங்களுக்கும் கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே, அஞ்சலி மீது வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.
Post a Comment